இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மும்பை முதல் தானேவிற்கு சொந்தமானலும், முதல் ரயில் சேவை என்பது சென்னையுடன் தொடர்புடையது என்பது மறுக்கப் படாத உண்மை. அப்படி சென்னையுடன் சேர்த்து ரயில் சேவையும், ரயில் நிலையங்கள்பற்றிப் பேசுவோமானால் அது கன்னியாகுமரி திப்ருகர் ரயில் பயண தூர கதையாக மாறிவிடும். 1832 ஆம் ஆண்டு முதல் ரயில் சேவைக்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், 1837 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ரயில் பாதை ரெட்ஹில்ஸ் சிந்தாரிப்பேட்டை பாலம் கட்டும் பணிகளுக்காகத் தொடங்கப்பட்டது. இதன் வளர்ச்சியாக 1856 ஆம் ஆண்டு தென்னிந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை ராயபுரம் ஆற்காடு இடையே ஆரம்பமானது. அதுவே தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் என்ற பெயரையும் ராயபுரத்திற்கு தந்தது. இதன் அருகாமையில் அமைந்துள்ள துறைமுகத்தின் கூட்டம் ராயபுர ரயில் நிலையத்திற்கு நெரிசலை அதிகரித்தது, இதுவே 1873 ஆம் ஆண்டு, இரண்டாம் ரயில் நிலையம் பார்க் டவுனில் அமைய வழிவகுத்தது. இவ்விடமே இன்று புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
இன்று தினமும் ஐந்து லட்சம் பயணிகளைச் சந்திக்கும் இந்த ரயில் நிலையம் ஆரம்ப காலத்தில் ஒரு தோட்டமாகவே இருந்தது. பின்னர் கோழி சண்டை அரங்கமாக மாற்றம் அடைந்தது. 1996 ஆம் ஆண்டுவரை மெட்ராஸ் சென்ட்ரல் என்று அழைக்கப்பட்ட இவ்விடம் பிறகு சென்னை சென்ட்ரலாக மாறியது. ஜார்ஜ் ஹார்டிங் என்பவரால் ரோமானஸ்க் மற்றும் கோதிக் கட்டிடக்கலை மூலம் இந்த ரயில் நிலையம் கட்டப்பட்டது. மெட்ராஸ் ரயில் நிலையம் ஆரம்ப காலத்தில் தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்திருந்தாலும் பின்னர் மெட்ராஸ் தெற்கு மராட்ட ரயில்வே நிருவனத்தோடு இணைக்கப்பட்டது. பின்னர் 1951 இல் தெற்கு ரயில்வே மண்டலமாக மாறியது. இந்நிலையத்தில் உள்ள சுமார் 136 அடி உயரம் கொண்ட அழகிய கடிகார கோபுரம் ராபர்ட் சிஷோலம் என்பவரால் கட்டப்பட்டது. நான்கு நடைமேடைகளைக் கொண்டு ஆரம்பமான சென்ட்ரல் ரயில் நிலையம் இன்று பதினெழு நடைமேடைகளைக் கொண்டுள்ளது.
ராஐ ராஐ சோழனின் தனிப்பட்ட சிந்தனை எப்படி தஞ்சை பெரிய கோயிலை எழுப்பியதோ அப்படியே ஆர்தர் தாமஸ் காட்டன் என்பவரால் ரயில்வே மேலோங்கியது. தினமும் சுமார் 200 ரயில்களைச் சந்திக்கும் இந்த ரயில் நிலையம் லட்சக்கணக்கான பயணிகளை ஒன்றினைக்கின்றது. தென்னிந்தியாவின் பல ரயில் நிலையங்களின் ஆரம்பம் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தொடர்ச்சியே . சென்னை மெரினா கடற்கரைஎப்படி பல மாற்றங்களைச் சந்தித்ததோ அப்படியே சென்ட்ரல் ரயில் நிலையமும் பல மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அது புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டாலும் சென்ட்ரல் ஸ்டேஷன் என்றே நம் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. நமது பயணம் ஒரு இலக்கை நோக்கிச் செல்கிறது அல்லவா? அப்படியே சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்படும் ஒவ்வொரு ரயிலும் ஒரு இலக்கை நோக்கி நகர்கிறது. ஆம் அது இங்கிருந்து பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம், திருப்பதி, ஷீரடி போன்ற பல நகரங்களை இணைக்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையம் பல மதங்களின் கூட்டமைப்பு, அதற்கு மொழிகளும், சாதிகளும் இல்லை.