மல்யுத்த வீரரான முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லன் என்று அழைக்கப்பட்ட காரணத்தால் இவ்வூருக்கு மாமல்லபுரம் என்ற பெயர் அமைந்துள்ளது, பின்னாளில் அது மகாபலிபுரமாக மாறியிருக்கக்கூடும் என்று வராஹ குகைக் கோயில் மூலம் தெரிய வருகிறது. 1984 ஆம் ஆண்டு உலக நினைவு பாரம்பரிய களமான UNESCO World Heritage Site வழியாக Group Of Monuments என்ற பெயரில் இந்நகரம் சேர்க்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தை பல்வேறு மண்ணர்கள ஆண்டாலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன் மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தில் தான் மிக துல்லியமான கைவினை திறன் கொண்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மகாபலிபுரத்தில் பார்க்க வேண்டிய சிறந்த பத்து இடங்களை பற்றி பார்ப்போம்.
கடற்கரைக் கோயில் (Shore Temple)
இன்று தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்களை காண முடியும் ஆனால் அதற்கெல்லாம் பழமையானது இந்த மாமல்லபுரம் கடற்கரை கோயில். ராஜசிம்மன் என்று அழைக்கப்படும் இரண்டாம் நரசிம்மவர்மனால் (கி.பி 700-728) காலகட்டத்தில் கடற்கரை கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கடற்கரை கோயிலானது structural temple என்று அழைக்கப்படுகின்றது அதாவது சுற்றி உள்ள கல் குவாரியிலிருந்து கருங்கற்களை கொண்டு அடுக்காக கட்டப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி உள்ள கருவறை இரண்டுமே சிவப்பெருமானுக்காக அர்பணிக்கப்பட்டுள்ளது, இவ்விரண்டிற்கும் நடுவே சாய்ந்திருக்கும் கோலத்தில் திருமால் சன்னதி அமைந்துள்ளது. மாமல்லபுரத்து ஏழு கோயில்கள் என்று சொல்லப்படும் (Seven Pagodas Of Mamallapuram) அதில் ஒன்று மிஞ்சி இருப்பது இதுவே, மற்ற அனைத்தும் கடலில் மூழ்கிப்போயின.
ஐந்து ரதம் (Five Rathas)
மாமல்லன் என்று அழைக்கப்படும் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630-668) காலத்தில் இந்த ஐந்து ரதங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இவைகள் ஐந்தாக உள்ள காரணத்தால் பஞ்ச பாண்டவர்கள் என்றும், ரதம் போன்று காட்சி தருவதும் சேர்த்து பஞ்ச பாண்டவர்கள் ரதம் என்று அழைக்கப்படுகின்றது. தர்மர், பீமன், அரசுனன், நகுலன் சகாதேவன் மற்றும் இவர்களின் மனைவியான திரௌபதி சேர்த்து ஐந்து ரதங்கள் குடையப்பட்டுள்ளன. இந்த ரதங்கள் அனைத்தும் பாறைகளை குடைந்து அதாவது monolith-rock-cut முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. திரௌபதி ரதம் உள்பகுதியில் துர்கையின் கருவறையும் அதன் வாகனமான சிங்கமும் வெளிபுரததில் கொண்டுள்ளது . அரசுனன் ரதம் எதிரில் அழகிய யானை சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது.
அரசுனன் தபசு - Arjuna's Penance & கங்கை இறங்குதல் - Descent of the Ganges
சிவபெருமானிடமிருந்து பாசுபத ஆயுதத்தை பெற, அரசுனன் ஒற்றை காலில் தவம் செய்வது போல் இந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வினை காண மூவுலக தேவர்களும் வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு விதமாக பகீரதன் கங்கையைய் பூமிக்கு கொண்டுவர தவம் செய்வதாக கருதுகின்றனர். யானைகள் தண்ணீர் குடிக்க முந்தும் சிற்பங்களும், இமயமலையின் சூழல் காட்சியும் பல்லவர்களின் கைவினை திறன் என்பதே அர்த்தம். அழகான திருமால் சிலையும் இதில் அடங்கும். இந்த சிற்பங்கள் அனைத்தும் முதலாம் நரசிம்மவர்மன், சாளுக்கிய மன்னரான இரண்டாம் புலிகேசியை வெற்றி பெற்றதற்க்காக மேற்கொள்ளப்பட்டது. பாறை சுவற்றில் வரைந்த சிற்பங்கள் என்பதால் இவ்விடம் ஆங்கிலத்தில் Open-air reliefs எனப்படுகிறது.
மகிஷாசுரமர்தினி குகை (Mahishamardhini Rock Out Mandapa)
சிவனின் மூன்று அவதாரங்களோடு மகிஷாசுரமர்தினி குகை மண்டபம் குடைந்து காணப்படுகின்றது. இதன் நடுவில் உள்ள கருவறையில் சோமாஸ்கந்தன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது, இதன் சிறப்பு சிவன், உமா (பார்வதி) மற்றும் கந்தன் (முருகன்) ஆகிய மூவரும் சேர்ந்து இருப்பதையே சோமாஸ்கந்தன் சிற்பம் உணர்த்துகின்றது. மகிஷாசுரமர்தினி மண்டபத்தின் வடக்கு சுவரில் துர்க்கை, மகிஷனை சண்டையிட்டு வெற்றி பெரும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது அதுமட்டுமின்றி விஷ்ணு சாய்ந்த கோலத்தில் இருக்கும் அழகிய சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரமர்தினி மண்டபம் முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630-668) காலத்து பாணியில் அமைந்தது.
ஒலக்கண்ணேசுவரக் கோயில் (Old Light House )
மலை குன்றின் மீது அமைந்திருக்கும் ஒலக்கண்ணேசுவரக் கோயில் இரண்டாம் நரசிம்மவர்மன் (கி.பி. 700-728) காலத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒலக்கண்ணேசுவர என்பது உலைக்ககண்ணீசுவரலிருந்த்து பெறப்பட்ட பெயர் அதாவது சிவனுடைய நெற்றியில் இருக்கும் நெருப்பை குறிக்கின்றது. சிவன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் என்று பல்லவரின் பராம்பரிய தெய்வங்கள் உள்ளன. இது பல்லவர் காலத்து கலங்கரை விளக்கமாக இருந்திருக்கின்றது. இக்கோயிலின் மீது நின்று சிவபெருமானை வழிபட்டதோடு மட்டுமல்லாமல் கப்பல்களையும் கண்காணித்து கொண்டு இருந்திருக்கின்றனர். இது இந்தியாவின் பழமையான கலங்கரை விளக்கமாக நம்பப்படுகிறது.
கிருஷ்ணா மண்டபம் (Krishna Mandapa)
இந்திரன் ஏற்படுத்திய புயல் மற்றும் மழையிலிருந்து இடையின மக்களை காப்பாற்ற கிருஷ்ணன் கோவர்தன மலையைய் தன் இடது கையில் தூக்கிய காட்சியே இங்கே செதுக்கப்பட்டுள்ளது. பசுக்கள், கோபியர், ஆயர்கள் என்று படர்ந்து, இந்த மண்டபத்தில் காணப்படுகின்றன. கிருஷ்ணா மண்டபம் 7 ஆம் நூற்றாண்டின் பாதியில் செதுக்கப்பட்டாலும் பிறகு இதன் முற்பகுதி 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
கிருஷ்ணரின் வெண்ணை உருண்டைக்கல் (Krishna's Butter-ball)
மகாபாரதத்துக்கும் மாமல்லபுரத்துக்கும் பலவேறு தொடர்பு இருக்கின்றன. பல்லவர்களும் தங்களை ஆன்மீகத்தோடு இணைத்து கொண்டார்கள். அதன் காரணமாக என்னவோ தெரியவில்லை இங்கே படர்ந்து இருக்கும் சிற்பங்களும், பாறைகளும் அதன் பெயர்களிலையே அமைகின்றன. இங்கிருக்கும் உருண்டைக்கல்லுக்கும் கிருஷ்ணருக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை என்றால் கூட நெடுங்காளமாக இந்த பாறை கிருஷ்ணரின் வெண்ணை உருண்டைக்கல் என்றே அழைக்கப்படுகின்றது. சுமார் 250 டன் எடை கொண்ட இந்த பாறையைய் நகர்த்த 20 ஆம் நூற்றாண்டில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மன் ஆட்சியிலும் ஒரு முறை இந்த பாறையைப் நகர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
கணேச ரதம் (Ganesha Ratha)
சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் கணேசர் வழிபாட்டில் உள்ளதால் இதற்கு கணேச ரதம் என்று பெயரிடப்பட்டிருக்கின்றது. ஒற்றை கல்லினால் செதுக்கப்பட்ட இந்த ரதமானது முதலாம் பரமேஸ்வரனால் உருவாக்கப்பட்டது. இக்கோயிலின் கல்வெட்டில் இடம்பெற்றுள்ள அதியந்தகாம என்ற பட்டமானது முதலாம் பரமேஸ்வரனையே குறிப்பிடுகின்றது. கணேசர் ரதமானது (கி.பி 672-700) காலகட்டத்தை சேர்ந்திருக்கும் என்றும் நம்பப்படுகின்றது.
கலங்கரை விளக்கம் (Modern Light House )
1900 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது. மாமல்லபுரத்தின் இயற்கை எழில் மிகுந்த காட்சிகளை இதன் மேலிருந்து காண முடியும் இவ்விடமானது பல்லவர் காலத்து கலங்கரை விளக்கமான ஒலக்கண்ணேசுவரக் கோயில் (Old Light House ) அருகில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மகாபலிபுரம் கடற்கரை ( Mahabalipuram Beach )
பல்லவர்களின் பரபரப்பான துறைமுகமாக மகாபலிபுரம் இருந்திருக்கின்றது. முத்து, மாணிக்கம் போன்ற வணிகம்(trading) சார்ந்த தொழில் இங்கே வளர்ந்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த கப்பல் மாலுமிகளின் வரவேற்பு இடமாக மகாபலிபுர கடற்கரை அமைததிருக்கின்றது. (Seven Pagodas) மாமல்லபுரத்து ஏழுகோவில்கள் இந்த கடற்கரையே சேரும். உலகம் போற்றும் கடற்கரை கோயில் இங்கேயே அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டாலும் பல்லவர்களின் சேவை இந்த மாமல்லபுரத்து கடல் கடந்து பரவியிருக்கிறது.
மகாபலிபுரத்திற்கு செல்லும் வழி
விமானம் ✈️
சென்னை விமான நிலையத்திலிருந்து மகாபலிபுரம் சுமார் 57 km தொலைவில் அமைந்துள்ளது.
ரயில் 🚆
செங்கல்பட்டு ரயில் நிலையம் சுமார் 29 km தொலைவில் அமைந்துள்ளது.
பேருந்து 🚌
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. சென்னை-கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரத்தை அடையலாம்.
மகாபலிபுரத்தின் சிறப்பு
யூனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்
மகாபலிபுரம் அமைவிடம்